பட்டம்மாள் - கர்னாடக இசையின் 'பாட்டம்மாள்'! |
ஜூலை 16,2009,15:52 IST |
![]() கர்னாடக சங்கீதத்தால் தமிழக நெஞ்சங்களை தாலாட்டியவர், தனது கனத்த சாரீரத்தால் ரசிகர்களை கவர்ந்த டி.கே. பட்டம்மாளின் (90)மறைவு, இசையுலகுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. பெண்கள் மேடையேறிப் பாடுவதும், கச்சேரி செய்வதும் ஏற்றுக் கொள்ளாத அந்த காலத்தில், இசையை தனது முழுநேரப் பணியாக ஏற்றுக் கொண்டு சாதனை படைத்தவர். இளம் வயதிலேயே மிகச்சிக்கலான பல்லவிகளைக் கூட, தனது கனமான குரலில் பாடி வியப்பை ஏற்படுத்தியவர். தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர் மற்றும் ராஜம்மாளுக்கு மகளாக, காஞ்சிபுரத்தில் 1919 மார்ச் 28ம் தேதி பிறந்தவர் பட்டம்மாள். பெற்றோர் இருவரும் நல்ல பாடகர்கள். அவர் இவருக்கு வைத்த பெயர் அலமேலு. ஏழு வயதில், ஒரு குடும்ப திருமண விழாவின் போது, பாடி அனைவரது கவனத்தையும் பெற்றார். இதைக் கண்டு வியந்த கர்னாடக இசை கலைஞர் பட்டம்மாளுக்கு வீட்டுக்கு வந்து பாட்டு சொல்லிக் கொடுக்க இசைந்தார். பட்டம்மாளின் இசைத்திறனை கேள்விப்பட்ட நைனாபிள்ளை, தியாகராஜ ஆராதனை விழாவில், அவர் பாடுவதற்கு ஏற்பாடு செய்தார். தியாகராஜ கீர்த்தனையில் மிகவும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அளிக்கும் அந்த வாய்ப்பு, சிறு வயதிலேயே பட்டம்மாளுக்கு கிடைத்தது. "ரக்ஷ பெட்டாரே' எனத் துவங்கும் "பைரவி' ராக பாடலை பாடி வியப்பை ஏற்படுத்தினார். பட்டம்மாள் பாடிய கிராமோபோன் ஆல்பத்தின் கவரில் பட்டம்மாள் படத்தை வெளியிட அனுமதி கேட்ட போதும், மேடை கச்சேரி வாய்ப்புகளையும் பட்டம்மாளின், ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்த அவரது தந்தை மறுத்து வந்தார். என்றாலும் பலரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். இதற்கிடையில் அந்த ஆல்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பட்டம்மாளின் தந்தையை சமாதானப்படுத்தி, சென்னை எழும்பூரில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார்.வை.மு.கோதைநாயகி அம்மாள் . ராகம், தானம், பல்லவி ஆகிய மூன்றிலும் மேடைக்கச்சேரி செய்த முதல் பெண்மணி அவர். 1929லேயே சென்னை வானொலியில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள அவர் சென்னையில் குடியேறினார். 1932ம் ஆண்டில் சென்னையில் முழு கச்சேரி, மறு ஆண்டில் பாபநாசம் சிவனிடம் அறிமுகம், 1934ல் மும்பை கச்சேரி என்று பட்டம்மாளின் இசைவாழ்க்கையின் சுருதி கூடியது. 1939ம் ஆண்டு கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் வெளியான தியாக பூமியில் முதல் சினிமா வாய்ப்பும் கிடைத்தது. பின்பு 1939ல் ஈஸ்வரனை பட்டம்மாள் மணந்தார். நாம் இருவர் படத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் வாய்ப்பை ஏற்று, சுப்ரமணிய பாரதியின் "வெற்றி எட்டு திக்கும்' எனத் தொடங்கும் பாடல் மற்றும் "ஆடுவோமே' எனும் மற்றொரு பாடலையும் பாடினார். பின்பு 1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஆல் இண்டியா ரேடியோவில் தேசபக்தி பாடல்களைப் பாடிய பெருமையையும் பெற்றார். பிழைக்கும் வழி, வேதாள உலகம், தீராத விளையாட்டு பிள்ளை, வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் ஏறத்தாழ 100 சினிமா பாடல்களை பாடினார். 1949ம் ஆண்டில் "பாரத சமுதாயம் வாழ்கவே' எனும் வாழ்க்கைப் படத்தில் வெளியான பாட்டு மிகப்பிரபலம் ஆனது. சுதந்திர தினம் என்றாலே இவரது குரல் எல்லோரது மனதிலும் ரீங்காரம் இடும்.அவரது இசைப்பயணம் ,இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பட்டம்மாளை ராஷ்டிரபதி பவன் அழைத்து பாடச் சொல்லி சிறப்பித்தார். டி.கே.பட்டம்மாள் (டி.கே.பி.,), எம்.எஸ்.சுப்புலட்சுமி (எம்.எஸ்.,) மற்றும் எம்.எல். வசந்தகுமாரி (எம்.எல்.வி.,), இசை உலகை பிரமிக்க செய்த இந்த மூவரும் தற்போது இல்லை. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்யநாத பாகவதர், முசிறி சுப்ரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் உள்ளிட்டோர் பட்டம்மாளின் சமகாலத்தில் கர்னாடக சங்கீதத்தில் கொடி கட்டி பறந்தவர்கள். சிக்கலான பல்லவிகளை பாடி, தாளங்களுக்கேற்ப அதன் நுட்பங்களை திறம்பட வெளிப்படுத்தியதால், இவர் "பல்லவி பட்டம்மாள்' என்றே அழைக்கப்பட்டார். பட்டம்மாள் பாணி எனும் தனிப்பாணியே சங்கீத உலகில் உருவானது. டைகர் வரதாச்சாரியார் இவருக்கு "ஞான சரஸ்வதி' எனும் பட்டத்தை அளித்தார். இதைத் தொடர்ந்து, ஏராளமான விருதுகள் குவிந்தன. சென்னை மியூசிக் அகடமியின் சங்கீத கலாநிதி விருதும் ஜனாதிபதியிடம் பத்ம பூஷண் விருதும் பெற்றார். 1998ம் ஆண்டில், பத்ம விபூஷண் விருதும் பெற்றார். 2002ம் ஆண்டில் சென்னை மியூசிக் அகடமியின் 75வது ஆண்டு விழாவில் செம்மங்குடி சீனிவாச அய்யர், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பட்டம்மாள் ஆகியோருக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு விருது வழங்கினார். பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ சிறந்த கர்னாடக இசை கலைஞர். வாழ்நாளின் பெரும்பகுதியை கர்னாடக இசைக்காகவே வாழ்ந்த பட்டம்மாளின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. இசை மேதை டி.கே.பட்டம்மாள் பாடல்கள் | ||

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக