திங்கள், 2 மார்ச், 2009

ஒரு மீனவ நண்பனின் ஆட்டோக்கிராவ்(f)


நடு இரவின் முழு நிலவை
முகில் மறைத்து,
விடிகாலைத் தோற்றங் காட்டும்.

கடுகளவு பயமின்றி
நடுக்கடலில் வலை பரப்பி
விழித்திருந்து கதை பகிர்வோம்.

'சிவசோதி'யில் 'படகோட்டி'
'ஜெய்ஸி'யில் 'பச்சை விளக்கு'
எம்.ஜி.ஆர் - சிவாஜிக்காய்
பட்டிமன்றம் தூள்பறக்கும்.

புறோக்கர் புலோமினா
புதுவரவு மணியக்கா
இவர்களுக்காய்
பட்டிமன்றம் திசைமாறும்.

கடல் மீனின் வரவுக்காய்
விண்மீன்கள் செலவாகும்.

செட்டியைக் கொண்டான்
உச்சி வர
விடிவெள்ளி முளைத்தெழும்.

வலை நிறைந்த மீனுக்காய்
மனம் நிறைந்து எதிர்பார்க்கும்.
வலை வளைத்து... வலித்து
கரை நோக்கி படகேகும்.

வெள்ளை மணற் பரப்பில்
வெளிச்சவீடு எழுந்து நின்று
ஒளி காட்டி வரவேற்கும்.

காலைப் பொழுது பட்டு
கன்னி மரியாள்
சிலை சிவக்கும்.
நன்றியின் மாற்றீடாய்
கண் பனித்து விழி மூடும்.

எம் வரவு பார்த்து
உறவுகள் ஏங்கி நிற்கும்

தொழிற் பகையால்
பிரிந்து நின்ற
எம்.எஸ்.டி ஆக்கள்
வலைப் பட்ட மீன் இழுக்க
வலிய வந்து கை கோர்ப்பர்.

வெயிற் பட்ட பனி போல
பகை மறந்து உறவு வரும்.

அப்போது கடல் பார்த்தோம்
மீனின் படுகைக்காய்
வான் பார்த்தோம்
நேரத்தின் கணிப்புக்காய்.

இப்போது கடல் பார்க்கிறோம்
நேவியின் வருகைக்காய்
வான் பார்க்கிறோம்
கிபிரின் நுழைவுக்காய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக