செவ்வாய், 27 ஜனவரி, 2009

வெற்றியுடன் துவக்குமா இந்தியா : இன்று இலங்கையுடன் முதல் சவால்

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் பார்மில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் தனது அடுத்த சவாலை எதிர் நோக்கி உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தம்புலாவில் நடக்கிறது. முதல் போட்டியிலேயே முத்திரை பதிக்க தயாராக உள்ளது தோனி தலைமையிலான இந்திய படை.

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று தம்புலா சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-0 கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது. இலங்கை அணியும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 கணக்கில் வென்றுள்ளது. இரு அணிகளும் வலுவாக இருப்பதால், இத்தொடரில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



பேட்டிங் படை: சேவக், காம்பிர், சச்சின், தோனி, யுவராஜ், ரெய்னா, ரோகித் சர்மா என வலுவான பேட்டிங் படையை உள்ளடக்கி உள்ளது இந்திய அணி. அனைவருமே நல்ல பார்மில் இருப்பது கூடுதல் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிரணிக்கு அச்சுறுத்தலை அளிக்கும் வகையில், ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவின் வேகப்பந்து வீச்சு அமைந்துள்ளது. இவர்கள் தவிர, முனாப் படேல், பிரக்யான் ஓஜா, அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அசத்த உள்ளனர். வலுவான நிலையில் காட்சி அளிக்கும் இந்திய அணிக்கு உள்ள ஒரே குறை, ஹர்பஜன் சிங் இல்லாதது தான்.



சவாலுக்கு ரெடி: இத்தொடர் குறித்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,"" இலங்கை தொடர் மிகவும் சவாலானது. அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது கடினமானது தான். இருப்பினும் கடந்த ஆண்டு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இந்த முறையும் வெற்றிக்கு கடுமையாகப் போராடுவோம். அணியில் ஹர்பஜன் இல்லாதது குறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. "பவர் பிளே' ஓவர்களில் அவரது பந்து வீச்சு அணிக்கு பலமாக அமையும். இருப்பினும் அணியில் பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா என இரண்டு பிரத்யேக சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹர்பஜன் இடத்தை அவர்கள் பூர்த்தி செய்வார்கள்,'' என்றார்.



வெற்றி தொடரும்: இலங்கை அணியை பொறுத்த வரை, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை சமீபத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளது. சமீபகாலமாக எழுச்சி நாயகனாக வலம் வருகிறார் தில்ஷன். இத்தொடரிலும் தில்ஷன் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயசூர்யா, ஜெயவர்தனா, சங்ககரா என அனுபவ வீரர்களும் அணிக்கு பக்கபலமாக உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அணிக்கு மகுடம் சூட்ட தயாராக உள்ளது முரளிதரன், மெண்டிஸ் சுழற் கூட்டணி. இவர்களது பந்து வீச்சை சமாளிப்பது இந்தியாவுக்கு சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. வேகப்பந்து வீச்சிலும் நிறைவாகவே உள்ளது இலங்கை அணி. இத்தொடர் குறித்து பேட்டி அளித்த இலங்கை கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில்,"" சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இலங்கை அணி கைப்பற்றியது உற்சாகம் அளிப்பதாக உள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி அடை ந்தது. அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. இந்திய சவாலை எதிர்கொள்ள முழு வீச்சில் இலங்கை வீரர்கள் தயாராக உள்ளனர். இலங்கையின் வெற்றி பயணம் தொடரும்,'' என்றார்.



இந்தியா ஆதிக்கம்: இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 106 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில், இந்தியா 55, இலங்கை 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகள் கைவிடப்பட்டது. சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் மோதிய 37 போட்டிகளில் இந்தியா 25 வெற்றி, 10 தோல்விகளை சந்தித்துள்ளது. இலங்கையில் விளையாடிய 39 போட்டிகளில் 12 வெற்றி, 21 தோல்விகளை பதிவு செய்துள்ளது இந்தியா.



சாதனை நோக்கி முரளிதரன்: ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை படைக்க தயாராக உள்ளார் இலங்கையின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். தற்போது 500 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள முரளிதரன், இன்னும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (502) சாதனையை தகர்க்கலாம். இன்றைய முதல் போட்டியில் முரளிதரன் இச்சாதனை படைப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.



தம்புலாவில் இதுவரை...:



* தம்புலாவில் இதுவரை இந்தியா, இலங்கை அணிகள் மோதியுள்ள ஐந்து போட்டிகளில் இலங்கை நான்கு முறையும், இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.



* 2004ல் இலங்கை அணி எடுத்த 282 ரன்களே இம்மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். இந்திய அணி கடந்த 2004ல் 270 ரன்கள் எடுத்ததே அதிக ரன்களாக இருக்கிறது.



* குறைந்தபட்ச ரன்னாக கடந்த 2008ல் இந்தியா 146 ரன்கள் எடுத்துள்ளது. இதே ஆண்டு இலங்கை அணி 142 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.



* கடந்த 2004ல் டிராவிட் எடுத்த 82 ரன்களே இந்திய வீரர் ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள். 2005ல் ஜெயவர்தனா அடித்த 94 ரன்களே இலங்கை வீரர் எடுத்த அதிகபட்ச ரன்.



அணிகள்: இந்தியா: தோனி (கேப்டன்), காம்பிர், சேவக், சச்சின், யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் சர்மா, இர்பான் பதான், யூசுப் பதான்,ரவீந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா, முனாப் படேல் மற்றும் இஷாந்த் சர்மா.



இலங்கை: ஜெயவர்தனா (கேப்டன்), ஜெயசூர்யா, சங்ககரா, தரங்கா, கபுகேதரா, முபாரக், தில்ஷன், கண்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மகரூப், பெர்னாண் டோ, குலசேகரா, மாத்தீவ்ஸ் மற்றும் துஷாரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக