இலங்கை பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தி.மு.க., செயற்குழு, பிப்ரவரி 3ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. இதுவரை எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணத்தில் எந்தத் தீர்வும் கிடைக்காததால், அன்று தி.மு.க., சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்துவரும் கடும் சண்டை, உச்சகட்டத்தை அடைந்துள்ளது. நாடு முழுவதும் விரவியிருந்த புலிகள், முல்லைத்தீவுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர யுத்தத்தில், ராணுவம் மற்றும் புலிகள் மட்டுமின்றி, அப்பாவி தமிழ் மக்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். இப்பிரச்னை, தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் நாளொரு ஆலோசனை, பொழுதொரு போராட்டம் என அறிவித்து, சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேற்று ஒரே நாளில், இப்பிரச்னையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. "போர் நிறுத்தத்தை புலிகளிடம் வலியுறுத்த முதல்வர் கருணாநிதி, இலங்கை செல்ல வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று மதியம் வலியுறுத்தினார். மாலையில் அவரைச் சந்தித்த இ.கம்யூ., தலைவர்கள், "இலங்கை பிரச்னையில் தங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டனர். "நாங்கள் ஏற்கனவே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அளித்துக்கொண்டு தான் இருக்கிறோம்; புலி ஆதரவைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் உங்கள் நடவடிக்கைக்கு அ.தி.மு.க., ஒத்துழைப்பு அளிக்கும்' என உறுதியளித்தார். அதைக் கேட்டு உற்சாகமான இ.கம்யூ., கட்சியினர், இரவில், இலங்கை பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், ம.தி.மு.க., - பா.ம.க.,- விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்' உதயமானது. இலங்கை சென்று திரும்பிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "பாதுகாப்பு வளையங்களில் தாக்குதல் நடத்த மாட்டோம்' என, அதிபர் ராஜபக்ஷே உறுதியளித்திருப்பதாகக் கூறினார். போர் நிறுத்தம் பற்றி ராஜபக்ஷே எதுவும் கூறியதாகவும் தெரியவில்லை; இவர் கேட்டதாகவும் கூறவில்லை. இதனால் மனம் நொந்துபோன முதல்வர் கருணாநிதி, கட்சியின் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதுதொடர்பாக, அக்கட்சி பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., செயற்குழுக் கூட்டம், பிப்ரவரி 3ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு, கட்சித் தலைமை நிலையத்தில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழ் இனப்படுகொலை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும், குற்றம்சாட்டும் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அ.தி.மு.க., - காங்கிரஸ் தவிர, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இலங்கைப் பிரச்னையில் சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
அதிரடி விலை குறைப்பு : காஸ் சிலிண்டருக்கு ரூ.25 கட் : பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.2 மிச்சம் | ஜனவரி 29,2009,00:00 IST |
|
|
| புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை இரண்டு ரூபாயும், சமையல் காஸ் விலை 25 ரூபாயும் நேற்று குறைக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப்பட்டன. அதன்பின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால், பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை குறைக்கப்படும் என, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறி வந்தார். ஆனாலும், எப்போது குறைக்கப்படும் என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, "விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்' என, அறிவித்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை இரண்டு ரூபாயும், காஸ் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாயும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மாறுவதை அனுமதிக்கும் திட்டம் இல்லை. பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளை மாற்றும் திட்டமும் இல்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். இந்தியா அசத்தல் வெற்றி! : வீணானது ஜெயசூர்யா சதம் | ஜனவரி 29,2009,00:00 IST |
|
|
| தம்புலா : தோனி, காம்பிர், ரெய்னா அதிரடியாக அரை சதம் விளாச, இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை வீரர் ஜெயசூர்யாவின் சதம் வீணானது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி தம்புலாவில் நேற்று நடந்தது. சேவக் இல்லை: டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக இந்திய துவக்க வீரர் சேவக் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார். தில்ஷன் "அவுட்': இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் தில்ஷன் (0), யூசுப் பதானின் துல்லியமான "த்ரோவில்' ரன் அவுட்டானார். அடுத்து வந்த சங்ககரா, ஜெயசூர்யாவுடன் இணைந்து தடுமாற்றத்தை சரிசெய்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தது. ஜெயசூர்யா அடித்து ஆட, சங்ககரா மிகவும் நிதானமாக ஆடினார். 44 ரன்கள் சேர்த்த சங்ககரா, ஓஜா சுழலில் வீழ்ந்தார். கண்டம்பி (17) ஏமாற்றினார். ஜெயசூர்யா சதம்: அபார ஆட்டத்தை தொடர்ந்த ஜெயசூர்யா, ஒரு நாள் அரங்கில் 28 வது சதத்தை கடந்தார். 10 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 107 ரன்கள் சேர்த்த இவர், ஜாகிரிடம் வீழ்ந்தார். மிடில் ஆர்டரில் மகரூப் (35) அதிரடி காட்டி ஆறுதல் அளித்தார். கேப்டன் ஜெயவர்தனா (11), கபுகேதரா (15) சோபிக்க வில்லை. 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். சச்சின் ஏமாற்றம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக சச்சின், காம்பிர் களிமிறங்கினர். சச்சின்(5), துஷாரா பந்து வீச்சில் எல்.பி.ட பிள்யு., ஆனார். இரண்டாவது விக்கெட்டுக்கு காம்பிருடன் ஜோடி சேர்ந்த ரெய்னா பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 113 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் அரங்கில் 14 வது அரை சதம் கடந்த காம்பிர் (62) அவுட்டானார். ரெய்னா (54), ரன் அவுட்டானார். தோனி அசத்தல்: அடுத்து வந்த யுவராஜ் சிங் தோனியுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இவர் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சிறப்பாக ஆடிய கேப்டன் தோனி, ஒரு நாள் அரங்கில் 26 வது அரை சதம் கடந்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த ரோகித் சர்மா, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 48.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தோனி (61), ரோகித் சர்மா (25) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை இலங்கை வீரர் ஜெயசூர்யா கைப்பற்றினார். இவ்வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 31 ம் தேதி கொழும்பில் நடக்ககிறது. தவறான தீர்ப்பு: நேற்றைய போட்டியில் அம்பயர் கொடுத்த தவறான தீர்ப்பால் சச்சின் (5) வெளியேறினார். ஆட்டத்தின் 4வது ஓவரை துஷாரா வீசினார். சச்சின் எதிர்கொண்டார். 4 வது பந்து "லெக்' திசையில் "பிட்ச்' ஆகி நல்ல உயரத்தில் சென்றது. ஆனால் இலங்கை வீரர்கள் அப்பீல் செய்ய, தனது முதல் போட்டியில் அம்பயராக செயல்பட்ட இலங்கையின் முன்னாள் வீரர் தர்மசேனா எல்.பி.டபிள்யு., கொடுத்தார். "டிவி' ரீப்ளேயில் சச்சின் அவுட் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. போட்டி துளிகள்... * நேற்று 107 ரன்கள் குவித்த ஜெயசூர்யா இம்மைதானத்தில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். கடந்த 2004 ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக இந்திய வீரர் ராகுல் டிராவிட் (104) முதல் சதம் பதிவு செய்திருந்தார். * இலங்கை அணி வீரர் தில்ஷன், கிரிக்கெட் அரங்கில் நான்காவது முறையாக நேற்று டக்-அவுட்டானார். இந்தியாவுக்கு எதிராக இது இரண்டாவது முறை. * இலங்கை சுழற் பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ், இரண்டாவது முறையாக ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. இதற்கு முன் மிர்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெண்டிஸ் 10 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் வீழ்த்த வில்லை. ஜெயசூர்யா சாதனை: தம்புலாவில் நேற்று சதம் பதிவு செய்த ஜெயசூர்யா, மூத்த வீரராக சதம் கடந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றார். இதற்கு முன் இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பாய்காட் முதலிடத்தில் இருந்தார். * நேற்று 37 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார் ஜெயசூர்யா (13070). முதல் வீரராக சச்சின் (16427 ரன்) உள்ளார். மகத்தான வெற்றி: முதல் ஒரு நாள் போட்டியில் பெற்ற வெற்றி மகத்தான வெற்றி என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து இவர் கூறுகையில்,"" இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி வெற்றியை பெற்று தந்தனர். காம்பிர், ரெய்னா ஜோடியின் அபார ஆட்டம் வெற்றிக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. பந்து வீச்சாளர்களும் தங்கள் கடமையை சிறப்பாக செய்தனர்,'' என்றார். | | | | | |
| |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக